INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, June 12, 2021

ஆன்மீகத்தில் கள்ளர்.

 ஆன்மீகத்தில் கள்ளர்.

1. திருமங்கையாழ்வார்
கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.  பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.

 இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். 
வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான். 

வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார் 
வனமுறைப் பயனே பேணினேன்... 
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் 

என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று  பல பாடல்கள் பாடியுள்ளார். 

நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார். 

திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொல்ல ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. அப்போது அவர் பாடிய பாசுரம்: 

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
பெருந்துயர் இடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு 
அவர்தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் 
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமமே 

திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரின் மகிமையைச் சொல்கின்றன. 
நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார். முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட  திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும். 

பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார். 

அந்த ஊர்கள்: 
திருவிண்ணகர், 
குடந்தை, 
திருக்குறுங்குடி, 
திருச்சேறை, 
திருவாலி, 
திரு எவ்வளூர், 
திருக்கண்ணமங்கை, 
திருவெள்ளறை, 
திருப்புட்குழி, 
திருவரங்கம், 
திருவல்லவாழ், 
திருப்பேர்நகர், 
திருக்கோவிலூர், 
திருவழுந்தூர், 
தில்லைச் சித்திரக்கூடம், 
திருவேங்கடம், 
திருமாலிரும்சோலை, 
திருக்கோட்டியூர், 
திருமையம், 
திரு இந்தளூர் கச்சி, 
திருவேளுக்கை, 
திருவெஃபா, 
திருவிடவெந்தை, 
கடல்மல்லை, 
திருத்தண்கா, 
ஊரகம், 
அட்டபுயகரம், 
திருவாதனூர், 
திருநீர்மலை, 
திருப்புல்லாணி, 
திருநாங்கூர், 
திருக்கண்ணபுரம், 
திருநறையூர் மணிமாடக் கோயில் 
இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார். 

ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து. 

திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று. 

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால் 
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன் 
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா 
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே 

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய். 

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை   ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும். 

பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது. மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார். 

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன் 
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன் 

சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்? 

2. கூற்றுவநாயனார்  
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். 
கள்ளர் குல குறுநில மன்னன். ஆடிமாதம் திருவாதிரை நட்சத்தில் பிறந்தவன்.சிறந்த சிவ பக்தியும் வீரமும்,கொடைத் தன்மையும் கொண்டவன். முக்குல வேந்தர்களையும் போரில் வென்ற தேர்,யானை, குதிரை மற்றும் காலாட்படை என்ற நால்வகை சேனைகளையும் பெரிய போர்களத்தை உடையவன். தன் வசமிருந்த நாடுகளை கூற்றங்களாக பிரித்து நல்லாட்சி வழங்கியமையால் கூற்றுவன் என்னும் சிறப்புப் பெயர் கொண்டான். களப்பான்(களந்தை) என்னும் திருவிசைப்பா பதிகம் பெற்ற சிவதல நகரை இராசதானியாகக் கொண்டவன். களர் என்னும் தேவார சிவதலத்தையும், களமங்களம்,களக்குடி,களத்தூர், களமாவூர், களக்காடு, களஞ்சேரி முதலிய ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபோர் களமுடையான், களத்துவென்றான்,களப்பாளி, களப்பாளன், களப்பளான், களந்தையாண்டான், களப்பாடியன், களக்குடையான், கிளாக்கடையன், கிளாக்கட்டையன், கிளாக்கன், தெத்துவென்றான், இருங்களன், இருங்கள்ளன், களன், களாவன் என்ற பட்டங்களை கொண்டனர்.

இவர்சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார்.அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக்கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுமாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும்பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழியஅரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.

மணிமுடிசூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குலமுதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச்சென்றுவிட்டனர்.

அதுகண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி,அந்நினைவுடன்துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர்கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சிபுரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.
 
3. மெய்பொருள் நாயனார்
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” – திருத்தொண்டத்தொகை.

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர்குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்புசெய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால்கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக்கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச்சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவுகாணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

இவ்வாறுஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர்முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத்   தோல்வியுற்றுஅவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன்வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக்கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கிஉள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர்பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கெனவந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறிஉள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசிஅடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப்காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினானஅவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர்ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்குஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளைஎடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும்நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்தபொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும்கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில்இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கிநின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும்நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார்.மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்தகுடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்துசென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன்.வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனைஇடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார்செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர்அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத்திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசுஅம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல்நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

4. நரசிங்கமுன்னையரையர்
“மெய்யடியான் நரசிங்கமுனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.

தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்தமுனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரைவென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின்திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச்செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித்திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும்நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒருதிருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டுஅருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.

நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம்இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல்உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்;)கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில்தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில்பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால்நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கிநம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கிநம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட  நரசிங்கமுனையார் அவரை அரசதிருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை  வளர்த்தார். இவ்வாறு அன்பர்பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்துமீளாத நிலைபெற்றனர்.

5. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
மன்னரெல்லாம் தம்ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்தஇம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன்புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால்அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன.அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும்நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம்இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு
திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.

பெயர் விளக்கம்
காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

ஆட்சிச் சிறப்பு
ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

துறவுள்ளம்
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

ஐயடிகள் யார்?
இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

6. கழற்சிங்க நாயனார்
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும்அடியேன்" - திருத்தொண்டத்தொகை. 

கழற்சிங்க நாயனார் 
பல்லவர் குலத்திலே தோன்றியவர்;சிவனடி அன்றிவேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்றுநாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச்சென்றார். அப்பொழுது திருக்கோயிலை  வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசிஅங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக்கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச்சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால்அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப்பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்துமிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச்செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்றசெருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரைஎடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரைநோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில்வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப்பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்கநாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும்பெருவாழ்வு பெற்றார்.

7. இடங்கழி நாயனார்  
இயற்கை வளமும், செயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர். குறுநில மன்னர் குலத்திலே - கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழருடைய குடியிலே அவதரித்தார் இடங்கழி நாயனார். பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து அவர்களை கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக்குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு சைவம் வளர்த்த சிவனடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அச்சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப்பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார்.

திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே ! சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று வேதனையோடு கேட்டார் வேந்தர்! சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த சிவப்பேற்றிற்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார். அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு வேணவும் எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது! என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.

குருபூஜை: இடங்கழியார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறதது 

தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார். இடங்கழி நாயனார் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

8. கோச்செங்கட் சோழநாயனார்
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து  வந்த கோச்செங்கணான் சேரன் கணைக்கால் இரும்பொறையை போரில் வென்று அவனை சிறைப் படுத்தினான் என்பதும், அங்கு சேரன் குடிக்க நீர் கேட்டு அதைச் சிறைக் காவலன் தர மறுக்க  'குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார்' என்ற பாடலை எழுதி வைத்து விட்டு உயிர் நீத்தான் என்பதும் பாட நூல்களின் வழியாக நாம் அறிந்த ஒன்று.இந்நிகழ்ச்சிக்குப் பின் பல வரலாற்று சம்பவங்கள் பொதிந்துள்ளது என்பது நாம் அறியாத ஒன்று. 

களப்பிரர் ஆதிக்கம் தமிழகத்தில் மிகுந்திருந்த நாட்களில் சமண மதம் பரவி கொல்லாமை போதிக்கப் பட்டு கொண்டிருந்தது. சிவபக்தனாகிய கோச்செங்கணான் போர்களில் அதிக நாட்டமில்லாமல் ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் சோழ நாட்டை ஆக்கிரமிக்கும் பொருட்டு போர் தொடுத்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று முறை சோழ நாட்டின் மீது போர் தொடுத்து  மூன்று முறையும் தோற்று சிறை பட்டான்.பொய்கையார் என்ற புலவரின் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதற்குப் பலனாக பொய்கையார் பாடியதே களவழி நாற்பது என்னும் பாடல் தொகுப்பு. அதற்குப் பின்னும் சேரன் அடாது செய்யவே சிறை பட்டு குடிக்க நீர் கிடைக்காமல் இறந்து போனான்.

எதிர்க்கும் அரசரின் குலத்தையே பூண்டோடு அழிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்த கோச்செங்கணான் மூன்று முறையும் பகை அரசனை மன்னித்து, அவன் நாட்டையே ஆளச் செய்தவன்  .காவிரிக் கரையோரம் எழுபது சிவ ஆலயங்களை எழுப்பி மதத்தை பரப்பியதுடன், மழை காலத்திலும் புயல் காலத்திலும் மக்கள் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தவன்.இவ் ஆலயங்களை  "யானை ஏறா மாடக் கோயில்" யானைகளாலும் தகர்க்க முடியாத மாடக் கோவில்கள் என்பார்கள். யானைப் படை கொண்ட சேரனை குதிரைப் படை 
கொண்டு வீழ்த்தியதாக கூறுவர்.

திருவானைக்கா, அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.

கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
மாசி மாத சதயம், கோச்செங்கட் சோழரது ஜெயந்தி தினமாகும்.  

ஆனைக்கா
பெண்ணாகடம்
சாய்க்காடு
மண்ணிப்படிக்கரை
செம்பியிருப்பு
செம்பொன்பள்ளி
வடதலைசங்காடு
தென்தலைசங்காடு
ஆக்கூர்
பெருமனை
தேரழுந்தூர்
வைகல்
நறையூர் (மணிமாடம்)
துற்காட்சி
நாலூர்
ஆவூர்
பசுபதிமங்கை
மாத்தூர்
பழையாறுவடதாளி
பழையாறுதென்றளி
பழையாறுகீழ்தளி
குடவாயில்
இங்கன்
பெருவேளூர்
நன்னிலம்
பனையூர்
இராமனதீச்சரம்
மருகல்
அம்பர்
வீழிமிழலை
சேய்ஞ்லூர்
பனந்தாள்தென்றளி
பாம்புரம்
மாதூர்
கீழ்வேளூர்
தேவூர்
சிக்கல்
பெருங்கடம்பனூர்
நாகைமலையீச்சரம்
நாகை மேலைக்காயாரோகணம்
வலிவலம்
கீலைவழி
கீழையிலரண்
தண்டலை
நீணெறி
களப்பாள்
இராசசேரிபுரம்
என்னும் நாற்பத்தேழு கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளது. இருபத்துமூன்று கோயில்கள் புலப்படவில்லை

9. புகழ் சோழநாயனார்
புகழ்ச்சோழ நாயனார் ஆடிமாத கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் கி.பி 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது. 

இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடை நிழலுக்கு அடிபணியச் செய்த மங்காத புகழ் தந்த மாமன்னர் சோழருக்குத் தலைநகரமாக விளங்கிய திருத்தலம் உரையூர். இத்தலத்தைத் தலைநகராகக் கொண்டு அநபாயச் சோழன் திருக்குலத்தின் மூதாதையராகிய புகழ்ச் சோழ நாயனார் அரியணை அமர்ந்து அறநெறி வழுவாது அரசாண்டு வந்தார். வீரத்திலும், கொடையிலும் புகழ்பெற்ற புகழ்ச் சோழன் சிவபெருமானிடத்தும், அவருடைய அடியார்களிடத்தும் எல்லையில்லா அன்பும்,  பக்தியும் பூண்டிருந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது. புகழ்ச் சோழர் கொங்குநாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு இன்புற்றார். பசுபதீசுவரர் புகழ்ச் சோழனின் ஒப்பற்ற பக்தியை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா...? மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன். 

சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர். எம்பெருமானின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!

குருபூஜை: புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.  

No comments:

Post a Comment